120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதல்வர் எடப்பாடி நாளை மதுரை பயணம்
3/29/2018 4:51:31 PM
மதுரை: மதுரையில் அதிமுக மாநில பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தாளை முன்னிட்டு, 120 ஏழை ஜோடிகளுக்கு நாளை பாண்டி கோயில் ரிங்ரோட்டில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் மணமக்களுக்கு 70 வகையான சீர்வரிசை கொடுக்கப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு இலவச திருமணத்தை நடத்தி வைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (மார்ச் 30) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 7.25 மணிக்கு மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் அவரை, அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்பு விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் மேடை வரை பேரவை தொண்டரணியினர், 200 இடங்களில் கிராமப்புற கலைஞர்கள் ஆட்டம், பட்டத்துடன் வரவேற்பு கொடுக்கின்றனர்.
120 ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து, முதல்வர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். பின்பு 12.30 மணிக்கு புறப்பட்டு, மதுரை விமான நிலையம் சென்று, மதியம் 1.15 மணி விமானத்தில் சென்னை செல்கிறார். இத்திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.