பக்தர்களின் சிவ, சிவ கோஷத்துடன் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
3/27/2018 3:40:45 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 21ம் தேதி காலை பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை, மாலை வேளைகளில் உற்சவர் ஏகாம்பரநாதர் சிம்ம வாகனம், சூர்ய பிரபை, சந்திர பிரபை, அன்ன வாகனம், பூதவாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி வாகனம், கையிலாய பீட ராவண வாகனம், அம்பிகை காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
6ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் திருக்காட்சி நடந்தது. 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்தனர். மாலையில் வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். 7ம் நாளான இன்று காலை 8 மணி அளவில் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மரத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர் சிவ, சிவ கோஷத்துடன் மரத்தேரை வடம்பிடித்து பக்தர்கள் இழுத்தனர். இதைத்தொடர்ந்து குதிரை வாகனம், மாவடி சேவை, சபாநாதர் தரிசனம், நூதன ருத்திரகோடி விமானம் உள்ளிட்ட உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். பத்தாம் நாள் இரவு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.