1500 அடி கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரால் மக்களுக்கு ஆபத்து
3/27/2018 3:37:23 PM
பல்லாவரம்: சென்னை பம்மல் நகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட செக்போஸ்ட் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 1500 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது. இது திறந்த நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் தவறி கல்குவாரியில் விழுந்து விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் உள்ளது.இதுதவிர குடும்ப பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களும் குல்குவாரி குட்டையில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். மேலும் சாலைக்கும் கல்குவாரி பள்ளத்திற்கும் வித்தியாசமே தெரியாத அளவில் இருப்பதால் இந்த சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.
எனவே திறந்தவெளி கல்குவாரி குறித்து பம்மல் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கல்குவாரி அருகிலேயே தனியார் பள்ளிகள் பல உள்ளன. வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு கால்நடை மருத்துவமனையும் உள்ளது. இதுபோன்ற இடத்தின் அருகிலேயே ஆபத்தான முறையில் கல்குவாரி உள்ளது. ஆகவே கல்குவாரியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியிலாவது நகராட்சி சார்பில் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.