சீட்டு மோசடியை தடுக்க புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
3/21/2018 2:36:05 PM
புதுடெல்லி: சீட்டு நடத்தி பணத்தை மோசடி செய்வதை தடுக்கும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் அம்சங்கள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. சீட்டு நடத்தி மோசடி செய்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சீட்டு நடத்துபவர்கள் பணத்தை திருப்பி தராமல் தலைமறைவாவது, பணம் தராமல் ஏமாற்றுவது போன்றவை நடந்து வருகின்றன. இதுமட்டுமின்றி, அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுவிட்டு தலைமறைவாவது அதிகளவில் நடக்கின்றன.இதனால் பணம் கட்டியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஏமாற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு சட்ட மசோதாவை தயாரித்தது.இந்த மசோதாவை, மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவபிரசாத் சுக்லா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். பொதுமக்களிடம் ஆசைகாட்டி சட்டவிரோதமாக பண மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான இம்மசோதாவின் மூலம், மோசடி செய்வோருக்கு கடும் தண்டனை கிடைக்கும்.