கர்நாடகாவில் தனிமதம் உருவாக்க விவகாரம்: வீரசைவ-லிங்காயத்து வகுப்பினர் மோதல்
3/20/2018 3:11:09 PM
கல்புர்கி: கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத்து மற்றும் வீரசைவ வகுப்பினரை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையி–்ல் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் லிங்காயத்து மற்றும் வீரசைவ வகுப்பை ஒன்றிணைத்து லிங்காயத்து மதம் உருவாக்க வேண்டும். அம்மதத்தை சிறுபான்மையோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசின் முடிவுக்கு மாநிலம் முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.இதனிடையில் தனி மத அங்கீகார விஷயத்தில் லிங்காயத்து வகுப்பினருக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக வீரசைவ வகுப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநில அரசு தனது முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி கல்புர்கி மாநகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்க்கிளில் வீரசைவ வகுப்பினர் போராட்டம் நடத்தினர்.
அதில், தங்கள் வகுப்பை அரசு சிறுமைப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், வினய் குல்கர்னி, சரணபிரகாஷ் பாட்டீல் ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.வீரசைவ வகுப்பினரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லிங்காயத்து வகுப்பை சேர்ந்தவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்து மோதலாகி மாறியது. ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் எம்.எஸ்.பாட்டீல் என்பவரின் மண்டை உடைந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். கல்புர்கி மட்டுமில்லாமல் பீதர், ரெய்ச்சூர், பெல்காவி, விஜயபுரா, தாவணகெரே, ஷிவமொக்கா உள்ளிட்ட பகுதியிலும் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.