அயப்பாக்கத்தில் இன்ஜினியர் வீட்டில் 120 சவரன் கொள்ளை
3/19/2018 2:38:39 PM
ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் லிங்கராஜ் (64). இவர், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே புத்தக கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திருநாமக்கனி (55). இவர்களது மூத்த மகன் ஆனந்த் (33). இவர் ஜிம்பாப்வே நாட்டில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் பிரகாஷ் (28). இவர், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.இந்நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி பிரகாஷுக்கும் தாம்பரத்தை சேர்ந்த அபிநயா (24)வுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து பிரகாஷ் மட்டும் நேற்று அமெரிக்காவுக்கு கிளம்பினார். பிரகாஷை வழியனுப்புவதற்காக நள்ளிரவு 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு லிங்கராஜ், தனது மனைவி மற்றும் அபிநயாவுடன் காரில் மீனம்பாக்கத்துக்கு கிளம்பினர். வழியனுப்பியதும், தாம்பரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அபிநயா சென்றார்.லிங்கராஜ், அவரது மனைவி ஆகிய இருவரும் காரில் நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பினர். அவர்கள் கிரில் கேட்டை திறந்து உள்ளே சென்றபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. படுக்கையறையில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் மறைத்து வைத்திருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.40 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
லிங்கராஜ் வீட்டுக்கு மர்ம நபர்கள், பக்கத்து வீட்டு மாடி படிக்கட்டுகள் வழியாக உள்ளே புகுந்து, கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டுக் கதவு மற்றும் பீரோவில் இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களின் ரேகைகளை பழைய கொள்ளையர்களின் ைகரேகைகளுடன் போலீசார் ஒப்பீடு செய்து வருகின்றனர்.இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அயப்பாக்கம் பகுதியில் இன்று காலை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.