பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவிதுண்டு
3/16/2018 3:02:16 PM
நாமக்கல்: நாமக்கல்லில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி நிற துண்டு அணிவித்தது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பிரதான சாலையில் நேதாஜி சிலை எதிரே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை நாமக்கல் நகர அதிமுகவினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த சிலைகளுக்கு காவி நிற துண்டு அணிவிக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டிருந்தன. இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துச் சென்றனர். சிலைகளுக்கு காவி நிற துணியை அணிவித்தது யார்? என தெரியவில்லை. இது பற்றி நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், முதியவர் ஒருவர் நேற்று காலை 3 சிலைகளுக்கும் காவிநிற துணியை அணிவித்து மாலை போட்டது தெரியவந்தது. அவர் அவ்வப்போது இதேபோல ஏதாவது ஒரு நிறத்தில் தலைவர்களின் சிலைகளுக்கு துணிகளை அணிவித்து மாலை போட்டு கும்பிடுவது வழக்கமாம். அதைபோலவே நேற்றும் காவிநிற துணியை அணிவித்தது தெரியவந்துள்ளது. ஆனாலும், யாராவது விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டனரா? என்பது குறித்தும் போலீசார்
விசாரிக்கின்றனர்.