சுங்குவார்சத்திரத்தில் கழுத்து அறுத்து வாலிபர் கொலை
3/16/2018 2:57:00 PM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. தற்போது இந்த சமுதாய நலக்கூடத்தை இரவு நேரங்களில் பல்வேறு சமூகவிரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை 7 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் கழுத்து அறுபட்ட நிலையில், உடல் முழுவதும் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்து கிடந்த வாலிபர் நீலநிற ஜீன்ஸ் பேண்ட்டும் மஞ்சள் கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு, உடல் முழுவதும் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்தனர்.
அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த டேனி (35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில், இறந்துபோன டேனிக்கு திருமழிசையில் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து, இங்கு வந்து சமுதாயநலக் கூடத்தில் தங்கி பிளம்பிங், பெயின்டிங் வேலைகளை செய்து வந்திருக்கிறார்.இந்நிலையில், சமுதாயநலக் கூடத்தில் தனது நண்பர் மொளச்சூர் குமரேசனுடன் நேற்றிரவு டேனி மது அருந்தியிருக்கிறார். பின்னர் குமரேசன் வெளியே வந்து நின்றிருக்கிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராம்ராஜ் (30), வினோத் (32) ஆகிய 2 பேரும் பைக்கில் வந்தனர். குமரேசனை சரமாரியாகத் தாக்கி துரத்திவிட்டு, சமுதாயநலக்கூட அறையில் இருந்த டேனியின் கழுத்தை அறுத்து உடல்பாகங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இருவரும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர் என தெரியவந்து உள்ளது.தலைமறைவான வினோத், ராம்ராஜ் ஆகிய இருவரும் வழிப்பறி, கத்தியை காட்டி பணம் பறித்தல், வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அவர்கள்மீது ஒரகடம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.