காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு நெல்லை, தூத்துக்குடியில் விடிய விடிய மழை
3/14/2018 3:07:45 PM
நெல்லை: காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் நெல்லை, தூத்துக்குடியில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. இதையடுத்து இரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி இடையே நிலை கொண்டுள்ள காற்றழுத்து தாழ்வு நிலை தொடர்ந்து அப்பகுதியிலே மையம் கொண்டுள்ளது. இதனால் நேற்று முதல் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு ெதாடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை கொட்டியது. நெல்லை, பாளையில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரம் வெளுத்து கட்டியது.பாபநாசம், களக்காடு, நாங்குநேரி, சேரன்மகாதேவி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் அதிக மழை பெய்தது. இதனால் சாலைகள், வீதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. எப்போதும் மழை வரலாம் என்ற சூழலே காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிப்பதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ்1 பொது தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட அணைப்பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் ஓரளவுக்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 28 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 32 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2642.34 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 356 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 49.54 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 110 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 110 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.ராமநதியின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 627 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதியின் நீர்மட்டம் 35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 62.80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமுள்ளதால் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.நெல்லை மாவட்ட அணைப்பகுதிகளிலே நீர்மட்டம் நேற்று அதிகளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் அணையில் 190 மிமீ பெய்துள்ளது. சேர்வலாறில் 102 மிமீ மழையும், கடனா நதியில் 110 மி.மீ மழையும், ராமநதியில் 130 மி.மீ மழையும் பெய்துள்ளது. மற்ற அணைப்பகுதிகளில் மழை நிலவரம்: மணிமுத்தாறு அணை 67.6 மிமீ, கருப்பாநதி அணை 55 மிமீ, குண்டாறு 98 மிமீ, நம்பியாறு 38 மி.மீ மழை, கொடுமுடியாறு 50 மி.மீ, அடவிநயினார் 50 மி.மீ மழை பெய்துள்ளது.நெல்லை மாவட்ட நகர்புறங்களை பொறுத்தவரை அம்ைபயில் 66.9மி.மீ, கல்லிடைக்குறிச்சியில் 72.4 மி.மீ, ஆய்க்குடியில் 64 மிமீ, சேரன்மகாதேவியில் 46 மிமீ, தென்காசியில் 89.3 மி.மீ, சங்கரன்கோவிலில் 25 மி.மீ, நாங்குநேரியில் 60 மி.மீ, செங்கோட்டையில் 101 மிமீ, சிவகிரியில் 9.2 மிமீ, நெல்லையில் 31.3 மிமீ, பாளையங்கோட்டையில் 45.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மொத்த மழையளவு 808.50 மி.மீ ஆகும். அதாவது சராசரியாக 62 சதவீதம் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துள்ள மொத்த மழையளவு 1060.80 மி.மீ ஆகும். தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுவதால் காற்றழுத்த தாழ்வு நிலை மழையால் ஓரளாவது தண்ணீர் தேங்குமா என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை இன்றும், நாளையும் தொடர்ந்தால் குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.