டில்லியில் 16ம் தேதி கிஸான் உன்னதி மேளா பிரதமருக்கு வாழை பட்டு நூல் கோட்
3/14/2018 3:05:22 PM
தூத்துக்குடி: டில்லியில் நாளை மறுதினம் (16ம் தேதி) நடைபெறும் கிஸான் உன்னதி மேளாவில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு தூத்துக்குடி விஞ்ஞானி முருகன், வாழைப்பட்டு நூலால் தயாரிக்கப்பட்ட கோட் வழங்க தயார் செய்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முருகன். இளம் விஞ்ஞானியான இவர், கடந்த 2002ம் ஆண்டு வாழை கழிவுகளில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். இதற்கு கடந்த 2006ம் ஆண்டு சென்னை ஐஐடி அங்கீகாரம் அளித்தது. மேலும் 2007ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம், இவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டில் இதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது.
இதனிடையே டெல்லியில் நாளை மறுதினம் (16ம் தேதி) நடைபெறும் கிஸான் உன்னதி மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் கலந்து கொள்ளும் முருகன், பிரதமர் மோடிக்கு வாழை பட்டு நூல் இலைகள் மூலம் பிரத்யேகமாக தயாரித்த இரு கோட்களை வழங்க முடிவு செய்துள்ளார். மேலும் வாழை கழிவுகளில் இருந்து தான் தயாரித்துள்ள சானிட்டரி நாப்கின் குறித்து வரும் 19ம் தேதி ஜனாதிபதியிடம் விளக்கம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அனில் குப்தா செய்துள்ளதாக முருகன் தெரிவித்தார்.