அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் 250 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை
3/14/2018 2:59:33 PM
நாகர்கோவில்: அரபிக்கடலில் திருவனந்தபுரத்தில் இருந்து 310 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கு 24 மணி நேரத்தில் நகருகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 படகுகளில் 250 மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டியுள்ளது. தென் கிழக்கு அரபிக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று காலை 8.45 மணி நிலவரப்படி தென்மேற்கு திசை நோக்கி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு அரபி கடலி மினிக்காய் தீவுக்கு தென் கிழக்கே 200 கி.மீ தூரத்திலும், திருவனந்தபுரத்தில் இருந்து 310 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. வடக்கு - வடகிழக்கு மாலத்தீவில் இருந்து 330 கி.மீ தூரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது வடக்கு - வடமேற்கு திசை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசை நோக்கியும், பின்னர் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியிலும் நகர்ந்து செல்லும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை கடலில் ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 6 அடி முதல் 7 அடி உயரத்திற்கு அலைகளின் சீற்றம் இருக்கும். எனவே மீனவர்கள் தென் தமிழகத்தில் மன்னார்வளைகுடா, கன்னியாகுமரி, மாலத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் காற்றின் வேகம் இருக்கும். இதனை போன்று லட்சத்தீவில் மினிக்காய் தீவு முதல் பித்ரா வரையுள்ள தீவு பகுதிகளில் 15ம் தேதி வரை பலத்த காற்று, 9 அடி உயர ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போன்று கேரளாவில் விழிஞ்ஞம் முதல் காசர்கோடு வரையிலான 15ம் தேதி நள்ளிரவு வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 9 அடி உயரத்திற்கு ராட்சத அலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள கடல் பகுதியில் சூறாவளி காற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. தென்கிழக்கு அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் நேற்று இரவு 10 மணி முதல் பரவலாக கன மழை பெய்ய தொடங்கியது. மலையோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது. இருப்பினும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கையை தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். கேரள மாநிலம் கொச்சி, கொல்லம் பகுதியில் உள்ள துறைமுக பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் குமரி மாவட்ட மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் குமரி மாவட்ட மீனவர்கள் கொச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற 19 படகுகளும், கேரள மாநிலம் அழிக்காலில் இருந்து சென்ற 1 படகும், தேங்காப்பட்டணம் பகுதியில் இருந்து சென்ற 6 படகும் கரை திரும்பவில்லை என்ற நிலை நேற்று இரவும் நீடித்திருந்தது. இதில் கொச்சியில் இருந்து சென்ற மேலும் 2 விசைப்படகுகள் வந்து சேர்ந்தது, அழிக்கால், தேங்காபட்டணம் படகுகள் தலா ஒன்றும் வந்து சேர்ந்தது. லட்சத்தீவு கடல் பகுதியில் 2 படகுகள் கரை சேர்ந்துள்ளன. அந்த வகையில் 20 படகுகள் கரை சேர வேண்டியிருப்பதாக மீனவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றில சுமார் 250 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். புயல் எச்சரிக்கைக்கு முன்னதாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்றுள்ளதால் அவர்களை ஹெலிகாப்டர், விமானம், கப்பல்கள் வாயிலாக தகவல் தெரிவித்து கரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றனி கேட்டுக்கொண்டுள்ளார்.