மகாராஷ்டிராவில் சுகாதாரமற்ற குடிநீரால் 14 பேர் பலி
3/14/2018 2:54:39 PM
யவத்மால்: மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில், சுகாதாரமற்ற குடிநீரை குடித்து வந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், அசோலா என்ற கிராமத்தில் சுமார் 250 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரைத்தான் அப்பகுதியினர் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஊரை சேர்ந்த மக்கள் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். கிட்னி செயலிழப்பு போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தனர். பல்வேறு நோய்களால் கடந்த 2 ஆண்டுகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நோய்களால் பாதிக்கப்பட்டு வந்த அப்பகுதி மக்களை பரிசோதனை செய்ததில், அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் மூலம் இந்நோய்கள் பரவியது தெரியவந்தது.
நோய் கிருமிகள் உற்பத்திக்கு காரணமான டாக்சின்ஸ் குடிநீரில் அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எங்கள் பகுதிக்கென்று இந்த ஆழ்துளை கிணறு மட்டுமே நீர் ஆதாரமாக உள்ளது என்றும், நோய் பரவுவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்களை பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.