ஊதிய உயர்வு உறுதி அளிக்க அதிகாரிகள் தயக்கம்: மின்வாரிய ஊழியர்கள் நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்
2/14/2018 4:50:31 PM
சென்னை: மின் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்க அரசு தயக்கம் காட்டுவதை கண்டித்து நாளைமறுநாள் முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. தமிழக மின்வாரிய ஊழியர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையாக 2.57 மடங்கு ஊதிய உயர்வு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வாரிய நிர்வாகம் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால் அரசு நிதித்துறை செயலாளர் தரப்பில், 2.57 மடங்கு ஊதிய உயர்வு தர முடியாது என்று வாரியத்துக்கு கடிதம் அனுப்பியதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு), தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ்(என்எல்ஓ), பாரதீய மின் தொழிலாளர்கள் சம்மேளனம்(பிஎம்எஸ்) உள்பட 10 சங்கத்தினர் வரும் 16ம் தேதி ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மின்வாரியத்தை பொறுத்தவரை தொமுச, சிஐடியு, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஐக்கிய சங்கம் ஆகிய சங்கத்தில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தற்போது சிஐடியு மற்றும் சில சங்கங்கள் இணைந்து ஸ்டிரைக் அறிவித்துள்ளதால் மின்வாரியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் தொடர்பாக ஏற்கனவே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர் நல துணை ஆணையர் சுமதி தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தொழிற்சங்கங்கள், உடனே ஊதிய ஒப்பந்தம் போட்டால் மட்டுமே ஸ்டிரைக் அறிவிப்பை வாபஸ் பெறுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனாஙஆனால் அதிகாரிகளோ, தற்போது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஊதிய உயர்வுக்கு ஒரு மாதமும், பணிச்சுமை கோரிக்கை நிறைவேற்ற 10 நாட்களும் ஆகும் என்றனர்.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் பாதியில் வெளியேறிவிட்டனர். பின்னர் இறுதியாக பிப்.15ம் தேதி ஒருவாய்ப்பு தருவதாக தொழிற்சங்கம் தெரிவித்து. அதன்படி நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த நிலையில், கோரிக்கைகள் தொடர்பான வாக்குறுதி படிவம் நாளை தராவிட்டால் நிச்சயம் நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக் நடத்துவோம் என்று தொழிற்சங்க கூட்டுக்குழு அறிவத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து இன்னும் ஊதிய உயர்வுக்கு அனுமதி கிடைக்காததால் வாக்குறுதி அளிக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். எனவே வரும் 16ம் தேதி(நாளை மறுநாள்) முதல் தமிழக மின் ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்துவது உறுதியாகி உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
குறிப்பாக, வயர்மேன், ஹெல்பர், மின் வழித்தட ஆய்வாளர்கள் உள்ளிட்ட முக்கிய பணிகளை கவனிக்கும் அதிகமானோர் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள உள்ளதால் மின்வாரிய பணிகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. பிற துறை ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்தினால் கூட, மாற்றுப்பணியாளர்களை கொண்டு சமாளிக்கலாம். உதாரணமாக, போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கின்போது தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்களை ஓட்டினர். ஆனால் மின் பணியை பொறுத்தவரை அதில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பணி செய்ய முடியும். அதாவது, மின் கம்பம் ஏறுவது, மின் இணைப்பு வழங்குவது, டிரான்ஸ்பார்ம் அமைப்பது என அனைத்து பணிகளும் பல ஆண்டுகளாக அதில் பணிபுரியும் நபர்களை வைத்து தான் செய்ய முடியும்.
இதற்கிடையில், ஸ்டிரைக் பிரச்னையை சமாளிக்க முடியாமல் வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். எவ்வளவோ எடுத்து கூறியும் அடம்பிடிக்கிறார்களே என்று தங்களுக்குள் புலம்பிக் கொண்டே டென்ஷனுடன் பணியாற்றி வருகின்றனர். ஸ்டிரைக் டென்ஷனால் உயரதிகாரிகள் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் ஊழியர்களை கடிந்து கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.