கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி
1/19/2018 3:49:41 PM
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு கிராமத்தில் மீனவர்கள் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசதிக்காக இப்பகுதியில் தனியார் ஏடிஎம் மையம் உள்ளது.இன்று அதிகாலை 4 மணி அளவில் ஏடிஎம் மெஷின் உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்தனர். அதிகாலையில் அவ்வழியாக மீன்பிடிக்க சென்றவர்களும் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். அப்போது சிலர், ஏடிஎம் மெஷினை உடைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மக்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களை மக்கள் விரட்டிச்சென்றபோது காட்டில் புகுந்து தப்பி விட்டனர்.
இதுபற்றி கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.