திருவண்ணாமலை அருகே டாக்டர் வீட்டில் 70 சவரன் கொள்ளை
1/19/2018 3:44:14 PM
வேட்டவலம்; திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(64). கால்நடை மருத்துவர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சேகர் ஓய்வுபெற்ற பின்பு வீட்டில் இருந்தபடியே தனியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தும், விவசாயமும் செய்து வருகிறார்.சேகரின் தம்பி ராஜேந்திரன், விருத்தாசலம் எல்ஐசி அலுவலகத்தில் வளர்ச்சி அதிகாரியாக இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். அதற்கான தொகை பெறுவதற்காக சேகர், ராஜேஸ்வரி, ராஜேந்திரன் மனைவி வசந்தா, அவரது மகன் ரஞ்சித் மற்றும் உறவினர்கள் கோபி, சரஸ்வதி ஆகியோர் காரில் நேற்று விருத்தாசலம் சென்றனர். சேகர் மற்றும் ரஞ்சித் விருத்தாசலத்தில் தங்கினர். மற்றவர்கள் வீடு திரும்பினர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் ராஜேஸ்வரி உள்ளிட்ட 4 பேரும் ராஜந்தாங்கல் வந்தனர். அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். ராஜேஸ்வரியும், வசந்தாவும் தங்கள் வீட்டுக்கு சென்றபோது கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 70 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ₹60 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வேட்டவலம் போலீசில் புகார் செய்தனர். வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.