மாணவன் மயங்கி விழுந்து சாவு : பொதுமக்களால் தாக்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் கைது
1/18/2018 3:06:07 PM
பெரம்பூர்: பள்ளி மைதானத்தில் மாணவன் மயங்கிவிழுந்து இறந்ததற்கு காரணமான உடற்கல்வி ஆசிரியரை பொதுமக்கள் சரமாரி அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை திருவிக.நகர் 17வது தெருவை சேர்ந்தவர் முரளி (41). இவர் அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்துகிறார். இவரது மனைவி சித்திரபாவை (37). இவர்களுக்கு ஒரு மகளும் நரேந்திரன் (15) என்ற மகனும் உள்ளனர். மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நரேந்திரன் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது தாமதமாக வந்ததாக கூறி நரேந்திரன் உட்பட 6 மாணவர்களை பள்ளியை சுற்றி ஓடி வரும்படி உடற்பயிற்சி ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. அப்போது நரேந்திரன் மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக மாணவனை கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நரேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து மாணவனின் தந்தை முரளி, திருவிக.நகர் போலீசில் புகார் செய்தார். புகாரில், ‘’உடற்கல்வி ஆசிரியர் தண்டனை கொடுத்ததால்தான் எனது மகன் மயங்கி விழுந்து இறந்துவிட்டான். எனவே, உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் திருவிக.நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி, செம்பியம் உதவி கமிஷனர் அர்னால்டு ஈஸ்டர், திருவிக.நகர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காவல்நிலையத்தில் இருந்து போலீசாருடன் பள்ளிக்கு சென்றனர்.
பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது நரேந்திரன் பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவனுக்கு தண்டனை வழங்கிய உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதனிடையே, உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை மாணவனின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தலைமறைவான உடற்கல்வி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உடற்பயிற்சி ஆசிரியரை கைது செய்யக்கோரி இன்று காலை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் பள்ளி எதிரே மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதனிடையே, பள்ளி முதல்வர் அருள், உடற் பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். இதையடுத்து மறியல் கைவிட்டனர்.