ஜன.29ல் தமாகா ஆர்ப்பாட்டம்
1/16/2018 3:48:14 PM
நெல்லை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்ெசயலாளர் விடியல் சேகர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்பு நிர்வாக குளறுபடி, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் மந்தநிலை, ரேஷன் சீனி விலை உயர்வு, மணல் தட்டுப்பாடு மற்றும் உள்ளாட்சி தேர்தல் இழுத்தடிப்பு உள்ளிட்ட மாநில அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமாகா சார்பில் வருகிற 29ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் 28 கட்சி மாவட்டங்கள், 32 வருவாய் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்பார்.
வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து ஜிகே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் சந்திக்கிறார். தினமும் மாலை 4 மணிக்கு சுற்றுப்பயணம் தொடங்கும். கட்சியின் அடிமட்டத்தை பலப்படுத்தும் விதத்தில் இந்த சுற்றுப்பயணம் அமையும். கட்சி உறுப்பினர் சேர்க்கை பணி வரும் 30ம் தேதி நிறைவுபெறும். காங்கிரசுடன் தமாகா இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமாகா தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் இல்லை.