காஷ்மீரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொதுமன்னிப்பு
1/11/2025 4:44:46 PM
ஸ்ரீநகர் : காஷ்மீரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை நல்வழிப்படுத்தும் வகையில், 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மெகபூபா கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில், பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் இளைஞர்கள் திசைமாறி செல்கின்றனர். கல்வீச்சு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது வழக்குகள் உள்ளன.
இளைஞர்களை நல்வழிப்படுத்த காஷ்மீர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் திருந்திவாழ வாய்ப்பளிக்கும் வகையில், 9 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு, சீர்திருத்தமே முன்னேற்றத்துக்கான சிறந்த வழியாகும். இளைஞர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4,327 இளைஞர்கள் மீதான வழக்குகள் சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டன. காஷ்மீர் முன்னேற்றம் அடைய இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டி அமலில் உள்ளது. சட்டசபையில் இதுபற்றி விவாதித்த பின்னர் இங்கு ஜிஎஸ்டி கொண்டுவருவது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.