பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
1/11/2025 4:35:03 PM
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தினசரி காலை 5.50 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுவது வழக்கம். ஆனால், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் விழா நாட்களில் கூடுதலாக நேரம் நீட்டிக்கப்பட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், கடந்த புத்தாண்டு தினத்தன்று 30,000 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
தற்போது, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் பஸ் போக்குவரத்து சேவை முடங்கிபோய் உள்ளது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை 1.5 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 மற்றும் 16ம் தேதிகளில் மெட்ரோ ரயில்கள் சேவை நேரம் இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.