ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்
1/11/2025 4:32:45 PM
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2012ம் ஆண்டு டிசம்பர் முதல் 2014ம் ஆண்டு மார்ச் வரை தலைமை செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்றினார். பின்னர் ஓய்வு பெற்ற பிறகு தமிழக அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் காணப்பட்டார். இந்த நிலையில், விசாரணை ஆணையத்தில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர் ஆனார். அன்றைய தினம் ஆறுமுகசாமி விசாரணையில், ஜெயலலிதாவை அவர் சந்தித்தது குறித்தும் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அரசு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை நடத்தினாரா உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ஷீலா பாலகிருஷ்ணன் தனது தரப்பு பதில்களையும் விளக்கங்களையும் எடுத்து கூறினார்.
இதையடுத்து, மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த 5ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 9.50 மணியளவில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர் ஆனார். நீதிபதி ஆறுமுகசாமி 10.11 மணியளவில் விசாரணை ஆணையத்திற்கு வந்தார். அவரிடம் 2ம் கட்டமாக இன்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா உடன் இருந்தவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். எனவே, அவரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு ஷீலா பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இவருடைய விசாரணையை தொடர்ந்து நாளை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இதய சிகிச்சை மருத்துவர் சுவாமிநாதன் ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க உள்ளார்.