சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அதிகாரிகள் 2 பேருக்கு சரமாரி அடி, உதை
1/10/2025 3:40:58 PM
மீனம்பாக்கம் : சென்னை விமான நிலையத்தில் 2 அதிகாரிகளை அடித்து உதைத்த போதை ஆசாமியை கைது செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதில் வந்த 347 பயணிகள், குடியுரிமை சோதனைக்காக வரிசையில் காத்திருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த அசோக்குமார் (32) என்பவர் வரிசையை முண்டியடித்து கொண்டு முன்னால் சென்று, தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை கொடுத்து, ‘விரைந்து சோதனை நடத்தி அனுப்புங்கள்’ என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், ‘’ உங்களுக்கு முன்னாடி பலபேர் நிற்கிறார்கள். எனவே, வரிசையில் வாருங்கள்’ என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் அதிகாரிகளுடன் அசோக்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த அசோக்குமார், குடியுரிமை அலுவலகத்துக்கு புகுந்து அங்கு சோதனை நடத்தி கொண்டிருந்த அதிகாரிகள் கவுர்சிங் (45), ஆராமூதன் (40) ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர்கள் கதறினர். சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அசோக்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போதும் அவர்களை கீழே தள்ளிவிட்டுவிட்டு அதிகாரிகளை தாக்கினார். இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அசோக்குமாரை பிடித்து ஒரு அறையில் அடைத்துவைத்தனர். காயம் அடைந்த 2 அதிகாரிகளையும் ஆம்புலன்சில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அசோக்குமாரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அசோக்குமார் குடிபோதையில் இருந்தது’ தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.