நியூசிலாந்து தொடரில் 4 இன்னிங்சில் 38 ரன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற வேண்டிய நெருக்கடியில் கெய்ல்?
1/5/2025 3:46:12 PM
ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். 38 வயதான கெய்ல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 13 டெஸ்ட், 275 ஒருநாள், 55 டி.20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட்டில் 15 சதத்துடன் 7214 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 22 சதத்துடன் 9420 ரன்களும், டி.20 போட்டிகளில் 2 சதத்துடன் 1589 ரன்களும் அடித்துள்ளார். இது தவிர ஐபிஎல், பிக்பாஸ், பாகிஸ்தான், வங்கதேசம் பிரிமியர் லீக் உள்ளிட்ட டி.20 போட்டி தொடர்களில் 20 சதம் விளாசி இருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர், டெஸ்ட்் அணியில் கெய்லுக்கும் இடம் கிடைக்கவில்லை. ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0, டி.,20 தொடரை 2-0 என வெஸ்ட் இண்டீஸ் இழந்தது. இதில், 4 இன்னிங்சில் கிறிஸ் கெய்ல் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி டி.20 போட்டியில் டக் அவுட் ஆனார். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அண்மையில் வங்கதேச பிரிமியர் லீக் இறுதி போட்டியில் கெய்ல் 69 பந்துகளில் 146 ரன்கள் விளாசிய நிலையில், சொந்த அணிக்காக விளையாடிய போட்டிகளில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் சர்வதேச கிரி்க்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம். லாபகரமான தொழில்முறை போட்டிகளில் அவர் விளையாடலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா விமர்சித்துள்ளார்.