கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை
12/27/2017 3:48:18 PM
கூடுவாஞ்சேரி : சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, ஓம்சக்தி நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி செளம்யா (33). சிறுசேரி சிப்காட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு கடந்த 24-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு செளம்யாவும் அவரது மகனும் கிளம்பி சென்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (47). அப்பகுதியில் வாட்டர்கேன் சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 2 மகன்களும் கேளம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களை வாரம் ஒருமுறை சீனிவாசன் சென்று சந்தித்து வருவது வழக்கம். இதேபோல், தனது மனைவி மற்றும் மகன்களை பார்க்க கடந்த 24-ம் தேதி சீனிவாசன் கேளம்பாக்கத்துக்கு சென்றார். இந்த 2 வீடுகளும் பகல் நேரங்களில் பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல், இவர்களின் வீட்டை கடந்த 25-ம் தேதி இரவு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தது. மறுநாள் காலை சீனிவாசன், சௌம்யா ஆகியோரின் 2 வீடுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வெளியூருக்கு சென்ற சௌம்யாவுக்கும் சீனிவாசனுக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் இருவரும் கூடுவாஞ்சேரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று சோதனை செய்தனர். சௌம்யா வீட்டு பீரோவில் சுமார் 45 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதும், சீனிவாசனின் வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்றனர். அங்கு இருவரது வீடுகளிலும் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக் கின்றனர்.