பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை
12/27/2017 3:36:58 PM
ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (51). இவர் பூக்களை பயிரிட்டு வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி நிர்மலா (41). இவர்களது மகன்கள் நித்யானந்தன் (17), ருத்ரா (15). வாசுதேவனின் மாமியார் செல்லம்மாள் (62). இவர்கள் அனைவரும் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வாசுதேவன் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நின்றிருந்த 2 பேர், வாசுதேவனை சரமாரியாக வெட்டிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். பலத்த காயங்களுடன் வாசுதேவன் மயங்கி விழுந்தார்.
இதன்பிறகு உள்ளே சென்ற நபர்கள், நிர்மலாவை மிரட்டி அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்தனர். இதை பார்த்து சத்தம் போட முயற்சித்த மாமியார் செல்லம்மாளிடம் அரிவாளை காட்டி மிரட்டினர். அவரது இடுப்பில் சொருகி வைத்திருந்த சுருக்குப் பையை பிடுங்கி, பூ வியாபாரத்துக்காக வைத்திருந்த ₹50 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். ‘’ யாரும் சத்தம் போட்டால் வெட்டி கொன்றுவிடுவேன்’’ என்று மிரட்டியவாறு முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதன்பிறகு வாசுதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து, வாசுதேவனை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.