நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை
12/23/2017 6:01:56 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தை முடக்குவது நாட்டுக்கு நல்லதல்ல என துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். அண்மையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, குஜராத்தில் பாஜவை தோற்கடிக்க பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எழுப்பப்பட்டது. இந்த பிரச்னையை முன்வைத்து கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்ைத காங்கிரஸ் முடக்கி வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
உலக அளவில் தலைசிறந்த பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க தொடர் முயற்சிகள் மேற்ெகாள்ளப்பட வேண்டும். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் விரைந்து எட்ட வேண்டும். இந்த நிலையில் நாடாளுமன்ற அலுவல்கள் தொடா்ந்து முடங்குவது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல.
ஒரு காலத்தில்உலக அளவிலான உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக இருந்தது. எனவே தற்போதுள்ள 7.5 சதவீத வளர்ச்சியை இரட்டை இலக்கமாக உயர்த்த அனைவரும் பணியாற்ற வேண்டும். உலக அளவில் முன்னேற்றம் காணும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. இதற்கு நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களும் பொது மக்களின் பங்களிப்பும் முக்கிய காரணங்களாகும். ஜிஎஸ்டி அமலாக்கம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட நடவடிக்கைகளால் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழல் மேம்பட்டுள்ளன. பெரிய அளவில் முதலீடுகளும் கிடைத்து வருகின்றன. இவ்வாறு வெங்கய்யா பேசினார்.