ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை காலை 9 மணிக்கு முடிவு: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு ேபாலீஸ் பாதுகாப்பு
12/23/2017 5:57:11 PM
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. காலை 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடந்தது. இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குபதிவு அன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதை தொடர்ந்து, அன்று இரவு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ள ராணி மேரி கல்லூரிக்கு துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பொன்விழா கட்டிடத்தில் உள்ள அறையில். வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு நிற்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசாரும், துணை ராணுவ படையினரும் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையம் முழுவதும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டிடத்தின் அருகில் கட்டைகள் கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் ஒலிப்பெருக்கியில் அலுவலர்கள் தெரிவிப்பது உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. ஆர்.கே.நகரில் 4 தபால் ஓட்டுகள் மட்டுமே உள்ளது. முதலில், அந்த 4 தபால் ஓட்டுகள் எடுத்து கொள்ளப்படும். அதன் பிறகு, வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். மேலும், வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
மையத்தில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுபாட்டு அறையில் இருந்து வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்யும் வீடியோகிரபர் உள்ளிட்டோர் இருப்பார்கள். அவர்கள் முன்னிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் 100 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தபால் ஓட்டுக்களில் ஒரு ஓட்டு மட்டுமே இன்று காலை வரை வந்துள்ளது. மேலும் 3 ஓட்டுக்கள் வரவேண்டும். இதனால் காலை 8 மணிக்கே ஓட்டு மிஷினில் உள்ள ஓட்டுக்கள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். 9 மணிக்கு யார் வெற்றியாளர் என்பது ஓரளவு உறுதி செய்யப்பட்டு விடும். 12 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
ஒரு தபால் ஓட்டு வந்தது
ஆர்.கே.நகரில் தொகுதியில் 4 ராணுவத்திற்கு தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி வரை ஒரே ஒரு தபால் ஓட்டு மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. நாளை காலை 8 மணி வரை தபால் ஓட்டுகள் பெறப்படும். எனவே, 4ல் எத்தனை தபால் ஓட்டுகள் வந்து சேரும் என்பது தெரியவரும்.