கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்
12/22/2017 3:25:08 PM
கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் நகை பட்டறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாயினர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாதர் ராண்டி வீதியில் ஒரு காம்பளக்சில் நகை பட்டறை நடத்தி வருபவர் ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி ராமன் வீதியை சேர்ந்த ரவிசங்கர்(50). இவர் அந்த காம்பளக்சின் முதல் தளத்தில் நகை பட்டறையும், 2வது தளத்தில் அலுவலகமும், 3வது தளத்தில் நகைபட்டறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கி இருக்கும் விடுதியாகவும் பயன்படுத்தி வருகிறார். இந்த பட்டறையில் நகை தயாரிக்கும் பணியில் 50 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் நகைகளை சுத்தம் செய்யும் போது தங்கத் தூள்களுடன் செல்லும் கழிவு நீர் வெளியே செல்லாமல் இருக்க கட்டிடத்தின் பார்க்கிங் இடத்தில் 10 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட பிளாஸ்டிக் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேங்க்கை 6 மாதத்துக்கு ஒரு தடவை சுத்தம் செய்து அடியில் தேங்கும் தங்கத்தூள் எடுக்கப்படும்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் கழிவு நீர் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் கூ.கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(28) என்பவரது ஏற்பாட்டின் பேரில் ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு ரத்தினபுரி கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்த ஏழுமலை(23), வேடபட்டி நம்பியழகன்பாளையத்தை சேர்ந்த கவுரிசங்கர்(21) ஆகியோர் ஈடுபட்டனர். முதலில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. பின்னர் தொட்டிக்குள் ஒன்றரை அடி ஆழத்தில் சேறும் சகதியுமாக இருந்த தங்க தூளுடன் கூடிய மணலை கவுரிசங்கர், ஏழுமலை ஆகியோர் உள்ளே இறங்கி எடுத்தனர். ராதாகிருஷ்ணன் வெளியே நின்று கழிவுகளை வாங்கி கொட்டிக் கொண்டிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் பாத்ரூம் செல்வதாக கூறி சென்றார். அப்போது இருவரையும் விஷவாயு தாக்கியது. இருவரும் சத்தம் போட்டபடி மயங்கி விழுந்தனர். திரும்பி வந்த ராதாகிருஷ்ணன் பார்த்த போது இருவரும் மயங்கி கிடந்ததை கண்டு அலறினார். அப்போது அங்கு தங்கி இருந்த நகை பட்டறை சூபர்வைசர் துடியலூர் ஜி.என்.மில் ஜேஎம்இ கார்டனை சேர்ந்த சூர்யகுமார்(24) இருவரையும் காப்பாற்ற உள்ளே இறங்கினார்.
இதில் அவரும் மயங்கினார். மீண்டும் ராதாகிருஷ்ணன் சத்தம் போடவே ஊழியர்கள் அங்கு திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த தீயணைப்பு வீரர்கள் டேங்கை உடைத்து உள்ளே இறங்கி மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கவுரிசங்கர், ஏழுமலை வரும் வழியில் இறந்தனர். சூரியகுமார் ஜிஎச்சில் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர். நகை பட்டறை அதிபர் ரவிசங்கர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள் இறந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர்.