குஜராத் தேர்தலில் 16 தலைவர்கள் தோல்வி
12/20/2017 3:45:14 PM
அகமதாபாத் : குஜராத் தேர்தலில் பாஜ மற்றும் காங்கிரசை சேர்ந்த 16 மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். குஜராத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜ ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இரு கட்சிகளிலும் பல மூத்த தலைவர்கள் தோல்வி கண்டுள்ளனர். பாஜ அரசில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் சங்கர் சவுத்ரி ஆத்மராம், பர்மர், கேஷாஜி சவுகான், ஜஷா பராட் தோல்வி அடைந்துள்ளனர்.
மூத்த எம்எல்ஏக்கள் எண்டி அம்ருதியா, ஹிரா ேசாலங்கி,மகேந்திர மரு ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் அனைவரும் பல முறை எம்எல்ஏவாக இருந்தவர்கள். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அர்ஜுன் மோத்வாடியா, சக்தி சிங், சித்தார்த் படேல் ,துஷார் சவுத்ரி ஆகியோரும் பாஜ வேட்பாளர்களிடம் வெற்றிக்கனியை பறிகொடுத்துள்ளனர். இதில் சித்தார்த் படேல் முன்னாள் முதல்வர் சிமன்பாய் படேலின் மகன் ஆவார். இவர்தான் தற்போதைய தேர்தலுக்கான காங்கிரசின் பிரசாரக்குழு தலைவராக பணியாற்றியவர். கடைசி நேரத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜவில் ஐக்கியமான எம்எல்ஏக்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.