சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆர்கே நகரில் போலி வாக்காளர்களை சேர்த்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
12/13/2017 3:57:46 PM
சென்னை: சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை சேர்த்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன், போலி வாக்காளர்களும், அவர்களை சேர்த்த அரசியல்வாதிகளும் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்த தடை கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் 45,999 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கையைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி, ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை பதிவு, வீடு மாறியவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘ஆர்.கே நகர் தொகுதியில் 45,999 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தவறான தகவலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆனால், 5117 போலி வாக்காளர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படவில்லை. எனவே, போலி வாக்காளர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, இன்னும் 5117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை. தற்போது, தேர்தல் ஆணையம் 1,947 போலி வாக்காளர்கள் உள்ளதாக ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் பெயர்கள் நீக்கப்படவில்லை என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வக்கீல் நிரஞ்சன் வாதிடும்போது, இரு இடங்களில் வாக்குகள் உள்ள 1947 வாக்காளர்களை கண்டுபிடித்துள்ளோம். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தற்போது அவர்களை நீக்க முடியாது. அந்த போலி வாக்காளர்களின் பட்டியலை ஒவ்வொரு வாக்குச் சாவடி அதிகாரிகளிடமும், போட்டியிடும் கட்சியிடமும் கொடுப்போம் என்றார்.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், ‘‘ஆர்கே நகர் தொகுதியில் 45,999 போலி வாக்காளர்களை நீக்கியதாக தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை முடித்து வைத்தது. ஆனால் ‘5117 போலி வாக்காளர்களை இன்னும் நீக்கவில்லை’ என்று மனுதாரர் தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது. கடைசியாக ‘1947 போலி வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் உள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளி வந்ததினால் அவர்களை பட்டியலில் இருந்து நீக்க முடியவில்லை.
அதே நேரத்தில் அந்த வாக்காளர்கள் பல இடங்களில் வாக்களிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தேர்தல் ஆணையம் தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் எந்த சமரசத்தையும் செய்யக்கூடாது. போலியாக உள்ள 1947 வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அந்த வாக்காளர்கள் தனியாக பட்டியலிடப்பட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் தர வேண்டும். போலி வாக்காளர்கள் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும். போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ேபாலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்த அரசியல் பிரமுகர்கள் வாக்காளிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.