இந்தியர்களுக்கு கூடுதல் விசா : இங்கிலாந்து தாராளம்
12/13/2017 3:54:10 PM
புதுடெல்லி: இந்தியர்களுக்கு முன்பை காட்டிலும் கூடுதலான விசாக்களை வழங்கி வருவதாக டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, வணிகம் போன்றவற்றுக்காக இங்கிலாந்து செல்ல இந்தியர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விசாக்களை இங்கிலாந்து அரசு வழங்கி வருகிறது.அந்தவகையில், ஓராண்டு காலத்துக்குள் 5.17 லட்சம் பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 9 சதவீதம் அதிகம்.
சுற்றுலா விசா கேட்டு விண்ணப்பித்தவர்களில், 4.27 லட்சம் பேருக்கு சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கடந்த ஆண்டை காட்டிலும் 11 சதவீதம் அதிகம். மாணவர்கள் கல்வி பயில 14 ஆயிரம் விசாக்களும், வேலைக்கான விசாக்கள் 53 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளன.அதிகளவில் விசா வழங்கப்பட்டு வருவதன் மூலம் இந்தியா, இங்கிலாந்தின் உறவு மேம்பட்டு வருவதை காட்டுவதாகவும், இதனால் வணிகம், கல்வி, சுற்றுலாத்துறைகள் வளர்ச்சி அடையும் என இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.