மல்லையா, லலித் மோடி வெளிநாடு தப்பிய விவகாரம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
12/13/2017 3:53:26 PM
புதுடெல்லி: குற்றங்கள் இழைத்து, வெளிநாட்டுக்கு தப்பியோடுவோரை கைது செய்து, இந்தியா கொண்டு வரப்படாததற்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிப்பதே கிடையாது’ என, நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.கர்நாடகாவைச் சேர்ந்த, மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, ‘கிங்பிஷர்’ விமான சேவை நிறுவனம் துவங்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பினார். ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக், முன்னாள் தலைவர், லலித் மோடி, ஊழல் வழக்கில் சிக்கிய பின், பிரிட்டனுக்கு தப்பியோடினார். இவர்கள் இருவரையும், இந்தியாவுக்கு கொண்டு வர, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, ‘புஷ் புட்ஸ் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை நடத்தி வந்த பெண் தொழிலதிபர், ரிதிகா அவஸ்தி, மோசடி வழக்கில் சிக்கினார். அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றம்மறுத்து விட்டது. இதையடுத்து, 2016 ஜனவரியில் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய ரிதிகா, ஜாமின் பெற்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் செல்ல நீதிமன்றத்திடம் அனுமதியும் பெற்றார். குறிப்பிட்ட காலம் கடந்த பின்னும், அவர் நாடு திரும்பவில்லை. அவரை நாடு கடத்தி, இந்தியா அழைத்து வருவதற்கான முயற்சிகளில், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி, அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:இந்தியாவில் குற்றம் புரிந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்களை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதில், அரசு உறுதியானநடவடிக்கைகளை எடுக்கவில்லை.என்ன மாதிரியான மனப்பான்மையுடன், இந்த அரசு செயல்படுகிறது? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை, அரசு மதிப்பதே கிடையாது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, பலமுறை எச்சரிக்கைகளுடன் அவகாசம் தந்த போதும், எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும், யாராவது தப்பிச் செல்கின்றனர். ஆனால், அதை பற்றி, இந்த அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. இந்த வழக்கில், எட்டு மாதங்களாக, அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, கூடுதல் சொலிட்டர் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.