நிலக்கரி சுரங்க வழக்கில் மாஜிமுதல்வர் குற்றவாளி: சிபிஐ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
12/13/2017 3:52:43 PM
புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஜார்க்கண்ட்மாநிலத்தில் ராஜ்ஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதில் பெருமளவு முறைகேடுநடந்ததாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அந்த தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமைசெயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியங்கள் அனைத்தும்விசாரிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியாகும் நாளன்று குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி 8 பேரும் இன்று காலை கோர்ட்டில் ஆஜரானார்கள். காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. மதுகோடா, குப்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. மற்ற 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.