கர்நாடக வாலிபர் படுகொலை: கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது
12/13/2017 3:50:25 PM
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் கங்கிலிபுரா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (32). கார் மெக்கானிக். இவர், கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பகுதியில் உள்ள பொன்மலை கோயில் அருகே, கடந்த 10ம் தேதி கழுத்தறுத்த நிலையில் இறந்து கிடந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முரளி (36). இவர் பழையபேட்டை காந்தி சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு உஸ்தலஅள்ளியை சேர்ந்த மோனிகா மம்தாதேவி (32) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே மம்தாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் நீண்டநாட்களாக பழக்கம் இருந்துள்ளது.
திருமணமான பின்பும், இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனிடையே, கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மேஸ்திரி மேச்சேரி (எ) செவத்தான் (40) என்பவருடன் மம்தாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அடிக்கடி பெங்களூருவில் இருந்து வந்து சென்ற கிருஷ்ணா பற்றி செவத்தான் மம்தாவிடம் கேட்டுள்ளார். அப்போது, கிருஷ்ணா தனது முன்னாள் காதலன் என்றும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், அவரை தீர்த்து கட்டினால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் மம்தா கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை கிருஷ்ணாவை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்த மம்தா, அவருடன் பைக்கில் தேவசமுத்திரம் கோயிலுக்கு சென்றார். பின்னர், கோயில் அருகேயுள்ள மறைவிடத்தில் உல்லாசமாக இருக்கலாம் என கூறி கிருஷ்ணாவை அழைத்துச் சென்றார்.
அங்கு மறைந்திருந்த செவத்தான் மற்றும் அவரது நண்பர் மேலேரிக்கொட்டாயைச் சேர்ந்த சக்திவேல் (21) ஆகியோர் சேர்ந்து, கத்தியால் தலையில் ஓங்கி அடித்தனர். மயங்கி விழுந்த கிருஷ்ணாவின் கழுத்தை அறுத்தும், சரமாரியாக குத்தியும் கொலை செய்தனர். இதையடுத்து மம்தா, அவரது கள்ளக்காதலன் செவத்தான், சக்திவேல் ஆகியோரை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
கைதான மூவரையும், கிருஷ்ணகிரி ஜேஎம் 2 கோர்ட்டில் நடுவர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், செவத்தான், சக்திவேல் ஆகியோரை சேலம் மத்திய சிறையிலும், மம்தாவை பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.