தெருவில் மது விற்பனை பாட்டில் தோரணம் கட்டி மக்கள் போராட்டம்
12/13/2017 3:48:28 PM
கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூர் இச்சிலடி தெருவில் புதுவை மது பாட்டில்களை வாங்கி வந்து சிலர் விற்று வருகின்றனர். அவர்களிடம் மது வாங்குவதற்காக இரவு நேரத்தில் வெளியூர் ஆட்கள் இச்சிலடி தெருவுக்கு வந்து செல்வதால் தெருவில் அமைதி குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலி மதுபாட்டில்களை தோரணமாக்கி தெரு முனையில் கட்டி வைத்தனர்.
இங்கு விற்கப்படும் கலப்பட போலி மதுவால் ஊர் மக்கள் பலரும் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வருவதாகவும், பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள், காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், காலி மது பாட்டில்களால் கட்டப்பட்ட தோரணத்தை அகற்றினர். மேலும் மது விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.