ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் சொந்த கிராமத்தில் சோகம்
12/13/2017 3:45:53 PM
சங்கரன்கோவில்: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் துளையிட்டு மூன்றரை கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி கொள்ளைப்போனது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, அங்கு கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, சங்கரன்கோவில் தாலுகா மூவிருந்தாளி, சாலைப்புதூரை சேர்ந்தவர். மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் படித்தார். போலீஸ் துறையில் ஆர்வமாக இருந்த அவர் படிப்பை முடித்த பின்னர் போலீஸ் தேர்வு எழுதி திருச்சி சிறப்பு போலீஸ் படை பட்டாலியனில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, கடந்த 2015ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். மதுரவாயல் இன்ஸ்பெக்டராக கடந்த அக்.10ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இவர் குடும்பத்துடன் சென்னை அருகே ஆவடி வசந்தம் நகர் நேரு தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி பானுரேகா (42). சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியை. இவர்களது மூத்த மகன் ரூபன் பெரியராஜ், சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் ராமன் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.பெரியபாண்டி, சுட்டுக் கொல்லப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சுறுசுறுப்புக்கு பெயர்போனவர்சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் பணியாற்றி பல்வேறு கொள்ளை, கொலை வழக்குகளை கண்டுபிடித்துள்ளார். இதன் அடிப்படையில்தான் ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இடம் பிடித்தார்.பெரியபாண்டி தந்தை செல்வராஜ். இவர் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் ராமாத்தாள். தங்கைகள் சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா. தம்பிகள் ஜோசப், அந்தோணிராஜ். பெரியபாண்டி மட்டுமே பட்டதாரி.