செங்கல்பட்டில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: மாணவர்களுக்கு சப்ளை
12/13/2017 3:44:08 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.செங்கல்பட்டு பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் லாமேக் மற்றும் போலீசார், நத்தம், தண்டுக்கரை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்று கொண்டிருந்த மறைமலைநகர் அடுத்த கூடலூரை சேர்ந்த டென்னிசன் (25), கீழக்கரணை பாலா (28), திம்மாவரம் படவேட்டம்மன் நகர் மணிமாறன் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்து செங்கல்பட்டு பகுதியில் விற்பனை செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கும் சப்ளை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்களும் விற்பனை செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடந்த 10ம் தேதி கஞ்சா விற்றது தொடர்பாக செங்கல்பட்டு புலிபாக்கத்தை சேர்ந்த ரஞ்சனை (35) கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.