3 சதவீத கமிஷன் தொகையுடன் ஏலம் கேட்க வேண்டும் பார் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் பகிரங்க மிரட்டல்
12/13/2017 3:39:39 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 5700 டாஸ்மாக் கடைகளில் மொத்தம் 2300 பார்கள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையில் 1.5 சதவீதத்தை அரசுக்கு கட்டணமாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர். திடீரென இந்த தொகை 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 3 சதவீத கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்றுபார் உரிமையாளர்கள் டெண்டர் எடுப்பதையும் புறக்கணித்து வந்தனர்.
ஆனால் கமிஷன் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் பார் உரிமையாளர்கள் பல நாட்களாக பார்களை மூடிவிட்டனர். இதனால், தமிழக அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் துணை முதல்வர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து 3 சதவீதம் என்பதை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் வரும் 18ம் தேதி, பார்களுக்கு ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை புறக்கணிக்க பார் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே டாஸ்மாக் அதிகாரிகள், பார் உரிமையாளர்களை டெண்டர் எடுக்கக்கோரி மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ‘’3 சதவீத கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். வரும் 18ம் தேதி மறுபடியும் டெண்டர் நடக்கிறது. சில பார் உரிமையாளர்களை டெண்டர் எடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். டெண்டர் நடத்தப்படும் அன்று வைக்கப்படும் பெட்டிகளை இன்றே வைக்க இருக்கின்றனர்.
இதில் ஏலம் எடுப்பதற்கான மனுவை உடனடியாக போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். 3 சதவீத கமிஷன் தொகைக்கு தற்போது ஏலத்தை எடுத்துகொள்ள வேண்டும். ஏலம் எடுத்த பிறகு கமிஷன் தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே டாஸ்மாக் பார்களை ஏலம் எடுப்பதை புறக்கணித்து வந்த பார் உரிமையாளர்கள் அதிகாரிகளின் மிரட்டலால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்’ என்றார்.