விவசாயிகள் பிரச்னையில் எதிர்கட்சிகள் முதலைக்கண்ணீர் முதல்வர் பட்னாவிஸ் குற்றச்சாட்டு
12/12/2024 2:58:07 PM
மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயிகள் பிரச்னையில் எதிர்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் இரண்டாவது தலைநகரான நாகபுரியில் மாநில சட்டமன்றத்தின் 2 வார குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது எதிர்கட்சி தலைவர் பாட்டீல் பேசுகையில், மாநிலத்தில் உள்ள பாஜ கூட்டணி அரசு விவசாயிகள் பிரச்னைகளை தீர்ப்பதில் பல்வேறு தவறுகளை இழைத்துள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை இத்திட்டத்தால் எவ்வளவு விவசாயிகள் உண்மையில் பயன் அடைந்துள்ளனர் என்ற தகவல் அரசிடம் இல்லை என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் பட்னாவிஸ் பேசியதாவது:விவசாயிகள் பிரச்னை குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கவலை தெரிவிப்பது முதலைக்கண்ணீர் வடிக்கும் செயலாகும். இது போலியான கவலையாகும். உண்மையில் இரு கட்சிகளும் மாநில விவசாயிகளை மிகவும் அதிருப்தி அடையச் செய்தன. முந்தைய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் விதர்பா பகுதிக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி திட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை. இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு உதவவில்லை. அக்கட்சிகளின் ஆட்சியோடு எனது அரசின் செயல்பாட்டை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. இவ்வாறு பட்னாவிஸ் பேசினார்.