பயனாளிகளுக்கு ஒதுக்காததால் எர்ணாவூரில் சேதமாகி வரும் குடிசைமாற்று வாரிய வீடுகள்
12/4/2025 5:05:02 PM
திருவொற்றியூர்: வடசென்னையில் கடந்த 2004ம் ஆண்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கும் எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பல கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது வசித்து வருகின்றனர். எனினும், இதில் பல வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் வீடுகள் வீணாகி வருவதுடன் இங்கு சமூகவிரோத செயல்களும் நடந்துவருகிறது.
மேலும் வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உட்பட அனைத்து பொருட்களும் உடைந்து சேதமாகி வருகின்றன. மேலும் குடியிருப்பில் ஓதுக்கீடு பெற்ற பலர், அதை வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டு சம்பாதித்து வருவதாக தெரிகிறது. திருவொற்றியூரில் மீனவர்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு அன்றாட வருவாய் பிரிவினர் தனியார் இடங்களில் அதிக வாடகை கொடுக்க முடியாமல், இக்குடியிருப்பில் ஒதுக்கீடு வழங்கும்படி வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற மக்களுக்கு காலியாக உள்ள வீடுகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகின்றனர்.