அதிக லோடு லாரிகளால் உடையும் சாலை: போராட்டம் நடத்த ஊனமாஞ்சேரி மக்கள் முடிவு
12/4/2025 5:00:23 PM
கூடுவாஞ்சேரி: தமிழகம் முழுவதும் ‘கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது’ என தமிழக அரசு தடை விதித்தும், வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கருங்கல் பாரங்களை ஏற்றிவரும் கனரக லாரிகளால் இப்பகுதி சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம் மற்றும் கீரப்பாக்கம் ஆகிய கிராமப் பகுதிகளை ஒட்டி பல்வேறு கிரஷர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு வாலாஜாபாத், செட்டிபுண்ணியம், ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து 30 டன்னுக்கு மேல் கனரக லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.
இதனால் இங்குள்ள பல்வேறு சாலைகளும் குண்டும் குழியுமாக மாறி, தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களின்போது இங்கு சேதமான சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதால், பல்வேறு சாலை விபத்துகளும் உயிர்ப்பலிகளும் நிகழ்கின்றன. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இப்பிரச்னையால் பாதிக்கப்படும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து விரைவில் பல்வேறு மறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.