தீவிரவாத சக்திகளிடமிருந்து மே.வங்கத்தை காக்க வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் பேச்சு
11/29/2017 2:41:26 PM
கொல்கத்தா: தீவிரவாத சக்திகளிடமிருந்து மேற்கு வங்க மாநிலத்தை பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த் முதன் முறையாக மேற்கு வங்கத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். கொல்கத்தாவில் நேற்று அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ராம்நாத் பேசியதாவது: எல்லை பகுதியை ஒட்டிய மாநிலமாக இருப்பதால் மேற்கு வங்கத்துக்கு பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன. தீவிரவாதிகள் எளிதில் ஊடுருவும் வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து மாநிலத்தை காப்பதில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒத்துைழப்பை மேம்படுத்தும் மத்திய அரசின் ெகாள்கையால் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிக பயன் அடையும். பல்ேவறு புதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் இந்தமாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இத்திட்டங்களில் மேற்கு வங்க மக்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதனால் நமது நாடு மட்டும் அன்றி அண்டை நாடுகளும் பயன்பெறும். இந்திய தேசியத்தின் அடையாளமாக மே.வங்கம் விளங்குகிறது. வங்க மண்ணில் தான் நமது நாட்டின் தேசிய கீதம் இயற்றப்பட்டது. வங்கத்துக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. அதே போல சிறந்த எதிர்காலமும் உள்ளது. இவ்வாறு ராம்நாத் பேசினார்