சொகுசு காருக்கு வரி செலுத்த மறுப்பு நடிகை அமலாபாலிடம் விரைவில் விசாரணை?
11/15/2017 3:52:07 PM
திருவனந்தபுரம்: நடிகை அமலாபால் சென்னையில் வாங்கிய எஸ் கிளாஸ் பென்ஸ் காரின் விலை 1 கோடிக்கு மேல் இருக்கும். இவர் புதுச்சேரியில் காரை பதிவு செய்து, கொச்சியில் பயன்படுத்தி வருகிறார். இதையடுத்து எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன பதிவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து அவர் தாக்கல் செய்த ஆவணத்தில், புதுச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கான ஆவணம் அளித்திருந்தார். அந்த ஆவணம் போலி என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து வரி செலுத்த கோரி மீண்டும் அமலாபாலுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து கேரளாவில் வரி செலுத்த முடியாது என்று அமலாபால் பதில் கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து போலி ஆவணம் ெகாடுத்து வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகை அமலா பால் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க கொச்சி குற்றப்பிரிவு ஐஜி ஜித்துக்கு, கேரள போக்குவரத்து ஆணையாளர் அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அமலாபால் வரிஏய்ப்பு தொடர்பாக கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் புதுச்சேரி சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு ஐஜி ஸ்ரீஜித் இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூடுதல் விவரங்களை கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் அமலாபாலிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகர் பகத்பாசில் கேரளாவில் வரி செலுத்த சம்மதம் தெரிவித்து பதில் அளித்திருந்தார். நடிகரும், எம்பியுமான சுரேஷ்கோபி தனது கார்களை புதுச்சேரியில் பதிவு செய்தது சம்பந்தமாக உரிய விளக்கம் அளிப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.