புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் காலையில் பலத்த மழை: பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி
11/7/2025 4:15:28 PM
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் மீண்டும் பலத்த மழை கொட்டியது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் நனைந்தபடி சிரமத்துடன் சென்றனர். இலங்கை அருகே தமிழக கடல் பகுதியொட்டி கடந்த 2ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் வட மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் 7வது நாளாக இன்றும் மழைநீடித்து வருகிறது. இதற்கிடையில், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை 5 நாளுக்குப் பின் நேற்று வலுவிழந்தது. இதனால் மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதே இடத்தில், அதாவது இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நேற்று புதிதாக மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அதேபோல், மன்னார் வளைகுடா மற்றும் லட்சத்தீவு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தலைநகர் சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும், சில சமயம் சற்று பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை சென்னை மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர், தாம்பரம், பல்லாவரம், மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை 8.30 மணி முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. கோடம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வேளச்சேரி, மயிலாப்பூர், மெரினா, திருவான்மியூர், அடையாறு, எழும்பூர், தண்டையார்பேட்டை, மணலி, மீஞ்சூர், பொன்னேரி, கூடுவாஞ்சேரி, பெரியபாளையம், கேளம்பாக்கம், திருப்போரூர், திருக்குழுக்குன்றம், கல்பாக்கம், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்பட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது.
முன்னதாக சென்னையில் இன்று காலை வானம் இருண்டு கருமேகங்கள் கூடிநின்றன. இதற்கிடையில், 6 நாளுக்குப் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை தேங்கியுள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பீக் அவர்சில் பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். போக்குவரத்து நெருக்கடியால் பஸ்களில் சென்ற மாணவர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சம் நாகை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரத்தில் 19 செ.மீ மழை பெய்திருந்தது. தொடர்ந்து நேற்றிரவும் நாகை மாவட்டத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வடக்கு பருவமழை தொடங்கிய 12 நாட்களில் நாகையில் இதுவரை 70 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் மீண்டும் மழை மக்களை மிரட்டி வருவதால் அவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.