மாணவியை கடத்தி பலாத்காரம்: மூன்று பேருக்கு ஆயுள்
11/7/2025 4:09:31 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி. கன்னியாகுமரியில் வசித்து வரும் இவரது அண்ணன் ஏசுதாஸ் என்பவரின் மகன் விஜயகுமார்(37). விஜயகுமார் வாரத்தில் ஒரு நாள் வசந்தகுமாரியின் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் விஜயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு கடத்தி சென்று விட்டார். கூடலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் செய்து கொண்ட விஜயகுமார் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப்ராஜா (27), கூடலூரை சேர்ந்த முனியாண்டி என்ற ரமேஷ் (41) ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார், ஜோசப்ராஜா, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சிறுமியையும் போலீசார் மீட்டனர். வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி திருநாவுக்கரசு, பாலியல் பலாத்காரம் செய்ததற்காக விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த முனியாண்டி என்ற ரமேஷ்க்கும், ஜோசப்ராஜாவுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.