பிரபல நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு எதிராக 2 நாளில் குற்றபத்திரிகை
11/7/2025 4:02:59 PM
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் ைகது செய்யப்பட்டு 85 நாள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் உள்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திலீப் ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு முன்பே குற்றபத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீர்மானித்திருந்தனர். ஆனால் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் அவருக்கு எதிரான குற்றபத்திரிகை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனது. இதற்கிடையே இந்த வழக்கில் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின.
இது குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா நிருபர்களிடம் கூறியது: திலீப்புக்கு எதிராக குற்றபத்திரிகை தயாரிக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. தற்போது பரிசீலிக்கும் பணி நடந்து வருகின்றது. குற்றபத்திரிகையில் அவர் எத்தனையாவது குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என முடிவு செய்யப்படவில்லை. குற்றபத்திரிகை இன்னும் 2 நாளில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.