அரசியல் கடினமானது என பயமுறுத்துகிறார்கள்: மருத்துவ முகாமை துவக்கி வைத்து கமல் பேச்சு
11/7/2025 3:57:22 PM
ஆவடி: நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63வது பிறந்த நாள். நற்பணி இயக்கம் சார்பில் அவரது பிறந்த தினத்தையொட்டி மருத்துவ முகாம் ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. முகாமை கமல்ஹாசன் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த மருத்துவ முகாம் எங்கள் நற்பணி மன்றத்துக்கு புதிதல்ல. மழை காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முகாம் இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு முக்கியமானது. மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக 550 மருத்துவ முகாம்களை தேவையான நேரத்தில் நடத்தியுள்ளோம். 130 இதய அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்துள்ளோம். நாங்கள் நிற்க வேண்டிய இடத்தில் நின்று வருகிறோம். இன்றும் அப்படித்தான். எங்கள் சேவையை ஊடகம் மூலம் இன்று உலகத்துக்கு காட்டுகிறார்கள்.
நாங்கள் அமைதியாக எங்களது வேலையை செய்து வருகிறோம். எங்கள் சேவை, முயற்சிகள் வலுபெறும். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. இது இல்லாமல்தான் முகாமை நடத்தி வந்தோம். இன்று அரசியலும் வந்துள்ளது. இதனை காட்டி, அதனை பயன்படுத்தவில்ைல. இதற்காக அதனையும் பயன்படுத்தி கொள்வோம். எங்களது பாதை கடினமானது என்று எல்லோரும் பயமுறுத்தி வருகிறார்கள். கனவு காண்கிறார் கமல் என்று எங்களை கூறுகிறார்கள். கனவு மூலம்தான் கண்டுபிடிப்புகள் வருகிறது. பெரிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் கனவுகளாகவும் ஆசைகளாகவும்தான் இருந்தது. பின்பு நினைவாக மாறியது.
கனவை நனவாக்கி பல கண்டுபிடிப்புகள் உருவானது. நாங்கள் கனவு காண்போம். அதனை நினைவாக்குவோம். நாங்கள் முயற்சி செய்வோம். இது நடக்கக்கூடிய விஷயம்தான். நமது அரசியலமைப்பு சட்டம் உலகத்திலேயே மிகவும் அற்புதமானது. அந்த அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் பெரிய வல்லுனர்கள். அந்த புத்தகம் நம் கையில் இருக்கிறது. மாற்றி எழுத முடியாத புத்தகம் அல்ல. தேவைப்பட்டால் மக்களுக்காக மாற்றி கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
தமிழகம் முழுவதும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து பிறந்த தின கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக தெரிவித்திருப்பதுடன் புதுயுகம் செய்ய புறப்படுங்கள் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கமல். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாளை என்பது மற்றுமொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேலை வருமெனத் தவமிருக்காது. காலையிலேயே புதுயுகம் செய்வோம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.