பெரியபாளையம் அருகே பரபரப்பு முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது: மக்கள் வெளியே வர தடை
11/7/2025 3:55:18 PM
ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் கிராமத்தில் 586 ஏக்கர் பரப்பளவு ஏரி உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள அன்னாவரம், முக்கரம்பாக்கம், நெல்வாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஏரி தண்ணீர் மூலம் 1500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. பெரியபாளையம் பகுதியில் ஒருவாரமாக பெய்துவரும் மழை காரணமாக முக்கரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இந்நிலையில், இன்று காலை திடீரென ஏரிக்கரையும் மதகும் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் மற்றும் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. இதனால் பயந்துபோன கிராம மக்கள், வீட்டைவிட்டு வெளியேறினர்.
கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஏராளமானவர்கள் ஏரிக்கரைக்கு விரைந்தனர். உடனடியாக மணலை கொட்டி உடைப்பை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் உடைப்பை அடைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பனை மரங்களை வெட்டி உடைப்பை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிைடயே, முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் கிராம மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என பொன்னேரி ஆர்டிஓ முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் பரபரப்பு நிலவுகிறது.