கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் சிறையில் அடைப்பு
11/7/2025 3:53:06 PM
திருத்தணி: திருத்தணி அடுத்த காவேரிராஜபுரம் காலனியை சேர்ந்தவர் தேவேந்திரன் (45). இவர், கடந்த ஆண்டு கனகம்மாசத்திரம் பஜார் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவரிடம் கந்து வட்டிக்கு ரூ.15 ஆயிரம் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், கந்து வட்டி கேட்டு தேவேந்திரனை செந்தில்குமார் மிரட்டியுள்ளார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசில் தேவேந்திரன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
ஆர்.கே.பேட்டையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் சிவா (34).இவர் விளக்கனாம்பூடிபுதூரை சேர்ந்த ரவியிடம் கடந்த 2013ம் ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் 2 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். இதன்பிறகு காலதாமதமாக பணம் கொடுத்ததால் அபராத வட்டி கேட்டு ரவி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து சிவா கொடுத்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீஸ் எஸ்ஐ பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ரவியை கைது செய்தார். பின்னர் அவரை சிறையில் அடைத்தார்.