ஜிஎஸ்டியை எதிர்ப்பது சரியல்ல எதிர்கட்சிகளுக்கு நிதிஷ் அட்வைஸ்
11/7/2025 3:11:02 PM
பாட்னா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டியை முன்பு வரவேற்ற எதிர்கட்சிகள் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பொருத்தமற்றது என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.ஐக்கிய ஜனதா தள தலைரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிராக எதிர்கட்சிகள் திடீரென பொங்கி எழுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அந்த வரிவிதிப்பு முறையை ஆரம்பம் முதலே எங்கள் கட்சி ஆதரித்து வருகிறது. பாஜ தலைலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத போது கூட அதனை நாங்கள் ஆதரித்தோம்.
ஜிஎஸ்டியை திட்டமிட்டதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் என்பதை எதிர்கட்சிகள் மறந்து விடக்கூடாது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியன்று எதிர்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக கூறுவதும் ஏற்புடையது அல்ல. இது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான, மிக கடினமான அதே நேரம் மிகவும் அத்தியாவசியமான நடவடிக்கையாகும். கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை எதிர்ப்பதன் மூலம் எதிர்கட்சிகள் மக்களிடம் என்ன சொல்ல முயல்கிறார்கள் என்பது விளங்கவில்லை. இவ்வாறு நிதிஷ் கூறினார்.