விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அமைச்சரிடம் கோரிக்கை
11/7/2025 3:09:31 PM
புதுடெல்லி: தொழிலதிபர் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.இங்கிலாந்தின் குடியேற்ற துறை இணை அமைச்சர் பிரான்டன் லூயிஸ் நேற்று டெல்லி வந்தார். மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். இந்த ஆலோசனையின் போது இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் விஜய்மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, கிரிக்கெட் சூதாட்ட தரகர் சஞ்சீவ் கவூர் உள்பட 13பேரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒத்துழைக்க வேண்டும் என கிரண் வலியுறுத்தினார்.
இதே போல் இந்தியாவால் தேடப்படும் 16 குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையில் சட்ட ரீதியான உதவியை இங்கிலாந்து அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான இங்கிலாந்தை காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பிரிவினைவாதிகள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி சஞ்சீவ் கபூர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்த வழக்கு அண்மையில் லண்டன் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த கோர்ட்டில் தான் மல்லையா வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்திடம் மல்லையா விவகாரத்தில் ஒத்துழைக்க வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.